Friday, May 1, 2015

Tuesday, April 28, 2015

19 ம் அரசியல் திருத்தமும் தழிழர் தரப்பும்.

மகிந்தவின் சர்வாதிகார ஆட்சியில் கொண்ட கோபத்தினால் 19 நிறைவேற்றப்பட வேண்டும் என மனது நினைத்தாலும் தழிழர் தரப்பு என்று மட்டும் நின்று பார்த்தால் 19 எங்களுக்கு பாதகமானதே.

ஏனெனில் நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பது என்பது சிங்களவர்களை விட தமிழர்களுக்கே மிகவும் முக்கியமானது. 

1987 இல் இலங்கை  - இந்திய ஒப்பந்தந்தின் மூலம் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு என திணிக்கப்பட்ட 13 ம் திருத்தத்தின் மூலம் மாகாண சபை முறைமை ஸ்தாபிக்கப்பட்டது. 

மாகாண சபை முறைமை என்பது ஒற்றையாட்சி முறைக்கு கீழான அரசியலமைப்பிற்கு சற்றும் பொருத்தமில்லாத விடயம். ஒற்றையாட்சியின் கீழான மாகாண அரசாங்கங்கள் உண்மையில் அரசின் நிர்வாக செலவீனங்களை அதிகரிப்பனவே அன்றி ஆக்கபூர்வமாக எதனையும் தந்துவிடாது.

இலங்கையின் அரசியலமைப்பின் உறுப்புரை 2 இல் இலங்கை ஒற்றையாட்சிக்குரிய நாடு என கூறப்பட்டுள்ளது. அதனை பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பகுதியினரின் சம்மதத்துடன் மட்டும் மாற்ற முடியாது. அதனை மாற்ற மக்கள் வாக்கெடுப்பின் ஆதரவும் தேவை. 1987 இல் ஆட்சியிலிருந்த ஐ.தே.க. அரசாங்கம் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்திருந்தது. 

13 வது திருத்தச் சட்டமூலம் உயர் நீதிமன்றின் சட்ட வியாக்கியானத்திற்கு எடுத்துகொள்ளப்பட்ட போது கூறப்பட்ட விடயம் இங்கு முக்கியமானது. அதாவது ஒற்றையாட்சி முறைமையின் கீழான அரசியலமைப்பில் மாகாண சபைகளை நிறுவுவதானால் அது அரசியலமைப்பின் உறுப்புரை 2 ற்கு முரணானது, எனவே அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் என்ற வாதம் மன்றில் முன்வைக்கப்பட்டது. 

ஆனால் பெரும்பான்மையான நீதியரசர்கள் இதனை நிராகரித்தனர். ஏனெனில் 13 ம் திருத்தத்தின் படியான ஆளுநர் பதவியின் மூலம் ஒற்றையாட்சிக்கு பங்கம் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. அதாவது மத்தியின் நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் நேரடியான பிரதிநிதியே ஆளுநர். அரசியலமைப்பின் 154(ஆ), 154(இ) உறுப்புரைகளை வாசித்தால் ஆளுநரின் அதிகாரங்களையும், மாகாணசபைகள் எத்துணை பலவீனம் வாய்ந்தவை என்பதையும் புரிந்து கொள்ளலாம். 

எனவே தான் மத்தியில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக இல்லாதாக்கப்பட்டு பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படும் போது மாகாண சபைகளின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படும். ஆளுநர் அற்ற மாகாண சபை, காணி அதிகாரம்,  வடக்கு கிழக்கு இணைப்பு என்பன தமிழர் பிரச்சனைக்கு குறைந்தளவிலான தீர்வை என்றாலும் தரக்கூடியதாக இருக்கும் என நம்புகின்றேன். 

எனவே தான் நிறைவேற்றதிகாரம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் சிங்களவர்களை விட தமிழர்களே முன்னிற்க வேண்டும். 

மாய தோற்றம்
இப்போது 19 வது திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றதிகாரம் ஒழிக்கப்பட்டு விட்டது என்ற மாயத்தோற்றம் ஏற்படுத்தப்படுகின்றது. 
சர்வதேசநாடுகளிற்கும் தமிழரின் இனப்பிரச்சனையை 19 இன் மூலம் தீர்த்துவிட்டோம் என அரசு சொல்ல முற்படலாம். 

ஆனால் 19 நிறைவேற்றதிகாரத்தினை மிகவும் குறைந்த சதவீதத்தையே குறைத்திருக்கின்றது. 19 இன் மூலம் செய்யப்பட்ட விடயங்களில் இரண்டு விடயங்களே என்னைப் பொறுத்தவரை பிரதானமானவை.

18 ம் திருத்தத்தின் மூலம் மகிந்த அதிகரித்த சில அதிகாரங்களை மீண்டும் 17 இருந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. மேலும் சில விடயங்களை புதிதாகவும் சேர்த்துள்ளது. ஆனால் நிiவேற்றதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்பட்டால் மட்டுமே மாகாணசபைகள் பலம் பெறும். 

19 நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நிறைவேற்றதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை தென்னிலங்கை பக்கமிருந்து வர வாய்ப்பில்லை. அது தமிழர் தரப்பிடமிருந்து மட்டுமே வரும். 

Monday, April 27, 2015

ஷிரானி பண்டாரநாயக்க மீண்டும் பிரதம நீதியரசரானமை எவ்வாறு?

பிரதமநீதியரசர் ஒருவரை பதவியில் இருந்து நீக்கவேண்டுமாயின் என்ன செய்யவேண்டும்?

அரசியலமைப்பின் 107(2) ம் உறுப்புரை இது பற்றி கூறுகிறது.

அரசியலமைப்பின் 107(2) வது உறுப்புரையில் 

'அத்தகைய நீதிபதி ஒவ்வொருவரும்.................அத்தகைய நீதிபதியை அகற்றும் படி கூறும் பாராளுமன்றப் பிரேரணை ஒன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையின் பெரும்பான்மையினால் (சமுகமளிக்காதோர் உட்பட) ஆதரவளிக்கப்பட்டு சனாதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் சனாதிபதியினால் ஆக்கப்படும் கட்டளையொன்றின் மூலமாகவன்றி அகற்றப்படுதலும் ஆகாது : ..........'

என்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி என்ற பிரதம நீதியரசரை பதவியிலிருந்து அகற்ற வேண்டுமாயின் 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நாடாளுமன்றில் 'குறித்த பிரதம நீதியரசரை பதவியில் இருந்து அகற்றுங்கள்' என்ற வேண்டுகோள் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். 

இவ்வாறு இருக்க இத்தகைய தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படாமல் மொகான் பீரிஸ் எவ்வாறு பதவியிலிருந்து அகற்றப்பட்டார்? 

மீண்டும் ஷிரானி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராக கொண்டுவரப்பட்டமை சட்டத்திற்கு முரணானதா?

நல்லாட்சியை வலியுறுத்தும் மைத்திரியின் அரசாங்கம் அதனை மீறியிருக்கிறதா? 

இந்த நியாயமான கேள்விகளுக்கு விடையை தெரிந்துகொள்ள ஷிரானி பண்டாரநாயக்க விடயத்தில் முன்னைய அரசு செயற்பட்ட விதம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். 


ஷிரானி பண்டாரநாயக்க பதவியிலிருந்து அகற்றப்படல்
அரசியலமைப்பின் 107(2) வது உறுப்புரைக்கு அமைவாகவே சிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிராக 01.11.2012 இல் 117 ஆளுங்கட்சி பாராளுமன்ற அங்கத்தவர்களின் கையொப்பத்துடன் குற்றப்பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது. 

தொடர்ந்து 14.11.2012 ந் திகதி சபாநாயகரால் 9 உறுப்பினர்கள் அடங்கிய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. இதில் 5 உறுப்பினர்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களாகவும், 4 உறுப்பினர்கள் எதிர்கட்சிகளை சேர்ந்தவர்களாயும் இருந்தனர். (எதிர்கட்சியை சேர்ந்த தெரிவுக் குழு உறுப்பினர்கள் பின்னர் அதிலிருந்து விலகியிருந்தனர்).

2013 ஜனவரி 10, 11 ந் திகதிகளில் இது பற்றிய விவாதம் பாராளுமன்றில் நடைபெற்றது. 

ஜனவரி 11 ந் திகதி குறித்த பிரேரணை பாராளுமன்றில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. அதாவது வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட பிரேரணை ஆரம்பத்தில் 117 உறுப்பினர்களுடன் 01.11.2012 இல் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையாகும். 
குறித்த பிரேணையின் இறுதியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

'.......மேலே குறிப்பிட்ட துர் நடத்தைக் குற்றச்சாட்டுகளின் காரணமாக மேற்படி தூ;நடத்தைக் குற்றச்சாட்டுகளை விசாரணை நடத்தி மேற்படி குற்றச்சாட்டுகளில் ஒன்று அல்லது அதற்கு அதிகமானவை எண்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகுழு பாராளுமன்றிற்னு அறிக்கையிடும் பட்சத்தில் .................பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ............. சிரானி .... பண்டாரநாயக்கவை அகற்றுவதற்கானதொரு பிரேரணையை அதிமேதகு சனாதிபதிக்கு சமர்ப்பிக்கக்கூடியவாறு தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படுதல் வேண்டுமென ..................... அரசியலமைப்பின் 107(3) ம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டியதான 107(2) ம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரமும், 78 அ இலக்க நிலையியல் கட்டளைகளின் பிரகாரமும் பிரேரிக்கின்றோம்.' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

(பத்தியை சுருக்குவதற்காக புள்ளிக்கோடிட்ட .......... இடங்களில் வார்த்தைகள் தவிர்க்கப்பட்டடுள்ளது. மற்றையவை அனைத்தும் பிரேரணையில் உள்ள படியான வாக்கியங்கள் )

இந்தப் பிரேரணையே அன்றைய தினம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. 

விவாதம் முடிந்த கையுடன் பாரளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இது தொடர்பான ஒழுங்குப்பிரச்சனை ஒன்றை எழுப்பியிருந்தார்.   

அது என்னவெனில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டதன் பின்னரான நிலை பற்றி பாராளுமன்றத்தில் இன்றைய தினம் பிரேரணை முன்வைக்கப்படவில்லை என்பதாகும். 

குறித்த குற்றப்பிரேரணை தொடர்பான தீர்வு முன்வைக்கப்படவில்லை என்றும் பிரதம நீதியரசரை அகற்றுமாறு கோரும் விண்ணப்பம் சபை ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெறவில்லை என்பதும் அவரது வாதமாக இருந்தது. 

அதன்போது எழுந்த பைசர் முஸ்தபா 
'சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையானது வேண்டுகோளின் ஒரு பாகம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த வேண்டுகோளை முன்வைத்தே கையொப்பம் இட்டிருக்கிறார்கள் எனவும் எனவே பிறிதானதொரு வேண்டுகோள் தேவையற்றது எனவும்' கூறி வாதித்தார். 

தொடர்ந்து கடுமையான வாதப்பிரதிவாதங்கள் பாராளுமன்றில் இது தொடர்பாக நடைபெற்றது. 

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் குறிப்பிடும் போது 
'இன்று இந்த பிரேரணை மன்றில் நிறைவேற்றப்பட்டால் நாம் குறித்த விடயம் தொடர்பாக இன்னுமொரு தெரிவுக்குழுவினை நியமிக்க வேண்டி ஏற்படும். ஏனெனில் குறித்த பிரேரணையின் தீர்வானது தெரிவுக்குழுவினை நியமிப்பதாகும். எனவும் குறித்த பிரேரணையின் செயற்படும் பகுதி  (Operative Part) தெரிவுக்குழுவொன்றினை நியமிப்பதாகுமே ஒழிய ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுப்பது அல்ல எனவும் கூறினார்.

இந்நிலையில் சபை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் கூடியபோது பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 49 வாக்குகளும் கிடைத்தன. 

இந்தப் பிரேரணை நிறைவேற்றத்தை வேண்டுகோள் விண்ணப்பமாக எடுத்துக்கொண்ட அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிரானி பண்டாரநாயக்கவை பதவியிலிருந்து அகற்றும் கட்டளையை வெளியிட்டதுடன் புதிய பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் அவர்களை நியமித்தார். 

ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான நிலை
சட்டத்தரணிகள தற்போது மொஹான் பீரிஸ் அவர்கள் அரசியலமைப்பிற்கு அமைவாக நியமிக்கப்படவில்லை. ஏனெனில் நாடாளுமன்றம் பிரதம நீதியரசரை பதவியில் இருந்து அகற்றுங்கள்' என்ற வேண்டுகோள் விடுக்காமலேயே முன்னாள் ஜனாதிபதியால் ஷிரானி பண்டாரநாயக்க பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார். எனவே மொஹான் பீரிஸின் நியமனம் செல்லுபடியற்றது என கூறுகின்றனர். 

இந்த சட்டப்பிரச்சனை மிகவும் நுண்ணியது என்பதுடன் இருபக்கமும் வாதிடமுடியும் என்பதையும் மறுப்பதற்கில்லை. 


மைத்திரியின் தேர்தல் வாக்குறுதி - மக்கள் தீர்ப்பு
லங்கை அரசியல் யாப்பின்படி மக்கள் தீர்ப்பிற்கே அதி உன்னத கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டவாக்கத்துறை, நீதித்துறை, நிறைவேற்றுத்துறை என்பன மக்களின் தத்துவங்களையே பிரயோகிக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரத்தில் அசாதாரணத்திற்கு உள்ளாக்கப்பட்ட பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு மீண்டும் குறித்த பதவியை பெற்றுக்கொடுக்க வழி செய்யப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

''முன்னால் இராணுவ தளபதி ஜெனரல் திரு. சரத்பொன்சேக்கா மற்றும் 43 ஆவது பிரதம நீதியரசர் திருமதி சிராணி பண்டாரநாயக்க, உட்பட அரசியல் ரீதியாக பழிவாங்கலுக்கும், தண்டனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டவர்கள் இழந்த பதவிகளையும், உரிமைகளையும் மீள வழங்குவேன்.'' 
தேர்தல் விஞ்ஞாபனம் பக்கம் - 53


எனவே சிரானி பண்டாரநாயக்கவை மீண்டும் பிரதம நீதியரசர் ஆக்குவதற்கான மக்கள் ஆணை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால அவர்கள் வெற்றி பெற்றதன் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது என கருதலாம்.

முன்னைய அனுபவம்
ஏனெனில் 1970 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அரசியலமைப்பினை மாற்றுவோம் என்ற கோரிக்கையினை முன்வைத்து ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட்டிருந்தது. 

இதில் எதிர் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை விட குறைவான வாக்குகளை பெற்றிருந்த போதும் தொகுதிவாரி முறை என்பதால் அதிகளவான ஆசனங்களை பெற்றுக்கொண்டது. சில இடங்களில் போட்டியிடாமல் சமசமாஜ கட்சிக்கு ஆதரவு வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து அது என்.எம்.பெரேரா தலைமையிலான லங்கா சமசமாஜக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைத்தது.

1972 இல் இலங்கையை குடியரசாக பிரகடனம் செய்யும் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது. பிரித்தானியர் காலத்தில் உருவாக்கப்பட்ட சோல்பரி அரசியல் யாப்பில் எக்காலமும் மாற்றமுடியாத உறுப்புரைகள் என அதுவரை கருதப்பட்டு வந்த 'சிறுபான்மையினர் காப்பீடு' தொடர்பான உறுப்புரைகளை மீறியே புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டது.

இதற்கு அப்போது ஆளுங்கட்சியால் கொடுக்கப்பட்ட விளக்கங்களில் மக்களிடம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்தே தேர்தலில் போட்டியிட்டிருந்தமையால் மக்கள் இதற்கு ஆணை தந்துள்ளனர். எனவே அரசாங்கம் அரசியலமைப்பினை எவ்வித இடையூறும் இன்றி மாற்ற முடியும் என்பது பிரதானமாக முன்வைக்கப்பட்டது.

இவ்வாறே இம்முறை தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிரானி பண்டாரநாயக்க விடயம் தொடர்பாக முன்வைத்தே மைத்திரிபால சிறிசேன அவர்கள் போட்டியிட்டிருந்தார். எனவே அவர் வெற்றி பெற்றதன் மூலம் குறித்த விடயத்திற்கான மக்கள் ஆணையை அவர் பெற்றிருக்கிறார் என கருத முடியும்.

எனவே இதுவும் சிரானி பண்டாரநாயக்க அவர்களை மீளவும் பிரதம நீதியரசராக நியமித்தமையை அங்கீகரிக்கும் வலுவான காரணங்களுள் ஒன்றாக அமையும்.

மொகான் பீரிஸ் நியமனம் பிழை என்றால் 
அவர் வழங்கிய தீர்ப்புகளும் பிழையானதா?
இல்லை.

அரசியலமைப்பின் 119(2) வது உறுப்புரையின் படி 'உயர்நீதிமன்றத்தின் நீதிபதியொருவரின் நியமனத்தில் ஏதேனும் குறைபாடு இருப்பதன் காரணமாக மட்டும் உயர் நீதிமன்றின் நடவடிக்கை எதுவும் செல்லுபடியற்றதாக கருதப்படக்கூடாது' என்ற ஏற்பாடு உள்ளது. 

எனவேதான் மொஹான் பீரிஸ் அரசயிலமைப்பிற்கு முரணான வகையில் நியமிக்கப்பட்டாலும் அவரது காலத்தில் உயர்நீதிமன்றில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கள் தொடர்ந்தும் வலுவுள்ளதாக இருக்கும்.